திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பெறப்படும் மனுக்கள் பரிசீலித்து நேரில் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாநகரப் பகுதியில் பாதாளச் சாக்கடை பணியில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், பாதாளச் சாக்கடை பணிகள் முடிந்த இடங்களில் தார்ச் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று (12.05.2023) மண்டல எண் 4, வார்டு எண் 51 கீழ கொசத் தெரு பகுதிகளில் நடைபெற்று வரும் புதைவடிகால் சாக்கடை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடைபெற்ற கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி மற்றும் சிமெண்ட் சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் 53 வது வார்டு கணேசபுரம் பகுதியில் புதிதாக புதைவடிகால் சாக்கடை அமைக்கும் பணியையும் பார்வையிட்டு பணிகளை விரைவில் தொடங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் செயற்பொறியாளர் கே. எஸ். பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் த.துர்காதேவி, உதவி ஆணையர் ச.நா. சண்முகம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.