
2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் நாகையில் திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
நாகை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ''தமிழகத்தில் உள்ள 40 கட்சிகள் யார் யார் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்களோ அந்த 40 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் வருவதாக செய்தி அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட ஒரு சிலர் நாங்கள் வர வாய்ப்பில்லை; வர முடியாது என்று செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
நான் அவர்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது வர முடியாது என சொல்பவர்கள் சிந்தித்துப் பார்த்து சொல்லுங்கள். இது தனிப்பட்ட திமுகவிற்கோ தனிப்பட்ட உங்களுக்கோ ஆன பிரச்சனை இல்லை. தனிப்பட்ட கட்சிக்கான பிரச்சனை இல்லை. அரசியலாக பார்க்காதீர்கள். இது தமிழ்நாட்டின் உரிமை. 39 எம்பிகளை வைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோம். அதையும் மீறி இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால்தான் நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எல்லாம் நிறைவேற்ற முடியும். அதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து செயல்பபடுங்கள். மீண்டும் இந்த திருமண விழாவின் மூலமாக எல்லா கட்சித் தலைவர்களுக்கும் கேட்டுக்கொள்ள விரும்புவது வரமுடியாதவர்கள் தயவுசெய்து வரவேண்டும்... வரவேண்டும்... என அழைப்பு விடுக்கிறேன். இதில் கவுரவம் பார்க்காதீர்கள். இவன் என்ன அழைப்பது நாம் என்ன போவது என நினைக்க வேண்டாம். இது தமிழ்நாட்டின் பிரச்சனை அதை சிந்தித்துப் பார்த்து நீங்கள் வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்'' என்றார்.