திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித வளனார் கல்லூரியில் உள்ள லலிதா ஜூவல்லரியின் நகைக்கடையின் இடது பக்கம் ஒரு நபர் நுழையும் அளவிற்கு துளைபோட்டு கடையின் 3 தளங்களில் உள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடை ஊழியர்கள் நகை கொள்ளையடிக்கப்பட்டதை உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததும், திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ், துணை ஆணையர்கள் , மயில்வாகணன், நிஷா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். ஏற்கனவே சமயபுரம் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் இதே போன்று துளை போட்டு நகை பணத்தை கொள்ளையடித்த சம்பவம் போன்று இது இருந்தால் இருப்பதால் உடனடியாக திருச்சி மாவட்ட எஸ்.பி. ஜீயாவுதீன் உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.
7 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்த நள்ளிரவு 1.00 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அந்த பகுதியில் இருக்கும் சுமார் 100- க்கும் மேற்பட்ட சிசிடிவி வீடியோகளை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அதே போல் செல்போன் டவர் உதவியுடன், அந்த பகுதியில் அந்த நேரத்தில் எத்தனை செல்போன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் திருச்சி முழுவதும் உள்ள விடுதிகள், சோதனை சாவடிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மிளகாய்பொடி பயன்படுத்தியிருப்பதால், அவர்கள் பயன்படுத்திய முகமூடி, வாட்ச், பிளாஸ்டிக் பொருட்கள், ஆகியவற்றின் மாடல்களை வைத்து எங்கு வாங்கியிருக்க முடியும் என்கிற ரீதியில் விசாரணையை முடுக்கியுள்ளனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய இரும்பு ராடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 100 கிலோ தங்கம் என்பதால் குறைந்தது 5 பேர் வந்திருப்பார்கள், அதை கார் மூலமாகவோ டூவில மூலமாகவோ பயன்படுத்தி இருப்பார்கள் என்பதால், அந்த பக்கம் சென்ற ஒவ்வொரு வண்டியும் யாருடையது என்பதை விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
லலிதா ஜூவல்லரி நகைக்கடை நிர்வாகி திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜை சந்தித்து புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது என்றார் லலிதா ஜூவல்லரி நகைக்கடை நிர்வாகி.