திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மணிகண்டம் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மர அறுவை மில்லில் கடந்த 3ஆம் தேதி அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மில்லில் நுழைந்து அங்கிருந்த செல்போனை திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது மில்லின் உரிமையாளர் அவரை விரட்டியுள்ளார். மீண்டும் அதே நபர் இரவும் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மில்லில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் நான்கு பேர் திருடனை மடக்கிப் பிடித்து அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
இதனால், அந்த இளைஞரின் நெஞ்சு, வலது கை, வலது கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மருத்துவ உதவி, உணவு மற்றும் தண்ணீர் என எதுவும் கொடுக்காமல் இரவு முழுவதும் கட்டி வைத்துள்ளனர். இதனால் வலி தாங்க முடியாத அந்த இளைஞர் இறந்துவிட்டார். இதுகுறித்து மணிகண்டம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டவர் ஐ.டி. பட்டதாரியான சக்கரவர்த்தி எனவும், இவர் திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் இவருக்கு திருமணம் ஆகி ஒரு கைக்குழந்தை உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குடிப்பழக்கத்தினால் மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போன நிலையில், இவரை மணிகண்டம் பகுதியில் திருடன் என நினைத்து மர அறுவை மில்லில் பணியிலிருந்த அசாம் மாநில ஊழியர்கள் சக்கரவர்த்தியை அடித்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மர அறுவை மில் உரிமையாளரான திரேந்தர், அசாம் மாநில தொழிலாளர்களான பைசல் சாக் (வயது 36), யாசின் மப்ஜில் ஹுக் (வயது 28) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.