திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில், தாமரைச்செல்வி என்பவருக்கு கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மறுநாள் தடுப்பூசி போடப்பட்டு, தாயும், குழந்தையும் மார்ச் 14-ம் தேதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீடு திரும்பியதும், குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. இதுகுறித்து டாக்டர்களிடம் குழந்தைகளின் பெற்றோர் கேட்டபோது, என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை என்று பதிலளித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் குழந்தையை குளிப்பாட்டிய போது, தொடைப் பகுதிக்குள் உடைந்து போன ஊசி இருப்பது போன்று தாமரைச்செல்விக்கு தெரிந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஊசி இருக்கும் பகுதியை சுற்றி தொடைப் பகுதியை அமுக்கி உள்ளார். அப்போது, உடைந்த ஊசி வெளியே வந்துள்ளது. இதுகுறித்து தாமரைச்செல்வி, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை, மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர், இந்த விவகாரம் குறித்து மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் இயக்குனர் 2 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.