வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இன்று இரவு கலைஞரின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று காலை இராணிப்பேட்டை வந்த கனிமொழி, பிரபல தனியார் விடுதியில் வேலூர் மாவட்ட மகளிர் மற்றும் தொண்டர் அணி ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி, ’’தூத்துக்குடி ஸ்டெர்லெட் ஆலை விவகாரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து 100 நாட்களுக்கு மேல் போராடியும் தமிழக அரசு பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனை குறித்து பேச முன்வரவில்லை. தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று கூறியுள்ளது கூட வெறும் கண் துடைப்பு என்றும் சல்பியூரிக் ஆசிட் வெளியேறும் அபாய நிலை ஏற்பட்ட பிறகும் தமிழக அரசு அதனை மூடவில்லையெனில் மக்களின் மிகப்பெரிய போராட்டத்திற்கு தமிழக அரசே காரணமாகிவிடும்’’ என்றார்.
மேலும், சி.பி.எஸ்.இ.தேர்வு முறையில் தற்போதுள்ள தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை நீக்கி விட்டு இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்கிற வகையில் மத்தியரசு மாற்றம் கொண்டு வரவுள்ளது தொடர்பான கேள்விக்கு, இது தான் பாஜக அரசின் அடிப்படை கொள்கை எனவும் இந்தி, இந்து இந்துஸ்தான் என்பதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் மத்திய பாஜக அரசு மக்களை பிரித்தாலும் நிலையை செய்கிறதே தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை.
பல்வேறு தடைகளை தாண்டி உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக்கூறியும் மத்திய அரசு அதனை செய்ய தயாராக இல்லை, இது தழிழகத்தை வஞ்சிக்கும் போக்கு என்றார்.
எஸ்.வி.சேகர் பற்றிய கேள்விக்கு, எஸ்.வி.சேகர் காவல்துறையின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளார் என தெரிவித்தார்.