இன்று (01-11-2018) ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட நிர்மலாதேவி, பத்திரிகையாளர்கள் அவரை நெருங்கிவிடாதபடி கடும் கட்டுப்பாட்டுடன் விறுவிறுவென அழைத்துச் செல்லப்பட்டார்.
பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவரும் இதற்கு முன்பு நீதிமன்றத்துக்கு வந்தபோது பத்திரிகையாளர்களிடம் பேச முயன்றனர். போலீஸைத் தாண்டி பேசினர். ஆனால், நிர்மலாதேவி மிகவும் இறுக்கமாக பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசாமலேயே இருந்தார்.
அவரை அழைத்து வந்த காவலர்கள் முன்னே கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டும், பின்னே அவரைப் பிடித்து தள்ளிக்கொண்டும் சென்றனர். இத்தகைய நெருக்கடிக்கிடையே யாரும் நிர்மலாதேவியை எளிதில் அணுக முடியாமல் இருந்தது.
இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு அவர் கொண்டுவரப்பட்டு வாகனத்திலிருந்து நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லும் பாதையில் ஏற்பட்ட குழப்பத்தால் ஏற்பட்ட சிறிய இடைவெளியில் நிர்மலாதேவியை நெருங்கினோம்.
"முருகன், கருப்பசாமி ஆகியோர் தங்கள் தரப்பு கருத்தை பத்திரிகையாளர்களிடம் சொன்னார்கள், ஆனால் நீங்கள் இதுவரை எதுவுமே வாய்திறக்கவில்லையே?" என்று கேட்டோம். கோபமடைந்த காவலர்கள், "எதுவும் பேசாதீங்க சார்..." என்று நம்மை தடுத்தார்கள். "கேள்வி கேட்பதில் என்ன மேடம் தவறு? நீங்க ஏன் அவரைப் பேசவிடமாட்டேன்றீங்க?" என்று கூறி நிர்மலாதேவியைத் தொடர்ந்தோம்.
"சொல்லுங்க... நீங்கள் கொடுத்த வாக்குமூலம் முற்றிலும் பொய்யானது என்று முருகன் கூறியுள்ளார், உங்கள் பதில் என்ன? சிறைக்குள் நீங்கள் புலம்புவதாகக் கேள்விப்பட்டோம், வெளியில் சொல்ல என்ன தயக்கம்? வேறு இடத்திலிருந்து உங்களுக்கு அழுத்தம், மிரட்டல் வருகிறதா?" என்று கேட்டுக்கொண்டே நாம் பின்னே செல்ல, இதுவரை பத்திரிகையாளர்களை நிமிர்ந்தும் பார்த்திராத வகையில் கொண்டு செல்லப்பட்ட நிர்மலா தேவி, திரும்பி நம்மை பார்த்தார்.
அவரது பார்வையில் இறுக்கம், சோகம், எதையோ சொல்ல விரும்பி சொல்ல முடியாத தவிப்பு அனைத்தும் சேர்ந்து மெளனமாக வெளிப்பட்டது. அந்த மௌனத்துக்குள் பல பெரிய உண்மைகள் உறைந்து மறைந்து இருப்பதை நம்மால் உணர முடிந்தது. அவரை வாய் பேச விடாமல் கூட்டிச் சென்றுவிட்டது காவல்துறை.