இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளில் 2023 ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனிடையே வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அத்துடன், திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளில் 11 லட்சத்து 15 ஆயிரத்து 975 ஆண் வாக்காளர்கள், 11 லட்சத்து 85 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 289 பேர் என மொத்தம் 23 லட்சத்து 1278 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 169 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லால்குடியில் ஒரு வாக்குச்சாவடி கூடுதலாகச் சேர்க்கப்பட்டதுடன் மாவட்டத்தில் 2,544 வாக்குச்சாவடிகள் உள்ளன. 75 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக திருச்சி 7 வது இடத்தில் உள்ளது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் தெற்கு மாவட்ட திமுக நகரச் செயலாளர் மதிவாணன், வக்கீல் தினகரன், அதிமுக (இபிஎஸ்) அணி சார்பில் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் ராவணன், அதிமுக (ஓபிஎஸ்) அணி பகுதிச் செயலாளர்கள் சுதாகர், தாயார் சீனிவாசன்,காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜவஹர், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிவா, வெற்றி செல்வன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.