திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கான புதிய கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தை திருச்சி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் இன்று திறந்து வைத்தார். இக்கல்லூரியில் தற்போது மருத்துவம் பயிலும் 750 மாணவர்கள், 300 முதுகலை மாணவர்கள், 400 நர்சிங் மாணவர்கள், 600 பாரா மெடிக்கல் மாணவர்கள் என மொத்தம் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயின்று வரும் நிலையில் மாணவர்களுக்கென்று இருந்த கூடைப்பந்து விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு தற்போது பிரத்யேகமான கூடைப்பந்து விளையாட்டு மைதானமாக 7.64 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான துவக்க விழா இன்று மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் அர்ஷியா பேகம் வரவேற்புரையாற்றினார். இதில் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் உதவி ஆணையர் கென்னடி, அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருண் ராஜ், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் சிறப்புரையாற்றிய துணை ஆணையர் சுரேஷ்குமார் பேசுகையில், "மருத்துவம் பயிலக்கூடிய மாணவர்களாகிய உங்களுக்கென்று ஒரு தனி அடையாளமும் கடமையும் உள்ளது. எனவே உங்களுடைய கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும். இதற்கு தடையாக உள்ள போதைப் பொருள் பழக்கங்களை உடனடியாக தவிர்த்து நல்ல மாணவர்களாக கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும். மேலும் புதிய மாணவர்களை ராகிங் செய்வது போன்ற தவறான முன்னுதாரணமாக நீங்கள் இருந்து விடக்கூடாது" என்று கூறினார்.