திருச்சி மத்திய சிறையில் கைதிகளை நேரடியாக சந்தித்துப் பேச சிறை நிர்வாகம் அனுமதி மறுத்ததால் வக்கீல்கள் சிறை வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் உள்ள மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என ஏராளமானோர் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மட்டும் சிறைத்துறையிடம் உரிய மனு அளித்து சந்தித்துப் பேசலாம். அவ்வாறு அனைவரும் ஒரே நேரத்தில் சந்தித்துப் பேசும் போது, கைதிகளைச் சந்திக்கும் அறையில் 50க்கும் மேற்பட்ட கைதிகள் ஒருபுறமும், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றொரு புறமும் இருந்து பேச முடியும். அவ்வாறு பேசுகையில் அதிக இரைச்சல், இருவருக்கும் இடையே உள்ள இரும்பு தடுப்பு போன்ற காரணங்களால் பேசுவது தெளிவாக கேட்க முடியாத நிலை இருந்து வந்தது.
இதனைத் தவிர்க்கும் விதமாக, கைதிகள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பேச, சிறைத்துறை சார்பில் 22 இன்டர்காம் வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதனை கைதிகளும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கைதிகளிடம் பேசுவதற்கு கைதிகளின் வக்கீல்கள் சிறைக்குச் சென்ற போது, சிறைத்துறை அதிகாரிகள், "வக்கீல்களும் இன்டர்காம் மூலம் மட்டுமே பேச வேண்டும். கைதிகளைத் தனியாக சந்தித்துப் பேச அனுமதிக்க முடியாது" என்று கூறியுள்ளனர்.
இதனைக் கண்டித்து வக்கீல்கள் சிறை வாசல் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் கூறுகையில், "வழக்கு தொடர்பாக சில தகவல்களை கைதிகளிடம் நாங்கள் தனிப்பட்ட முறையில் கேட்க வேண்டும். அதை இன்டர்காமில் பேசினால் அது வழக்கிற்கு பின்னடைவாக அமைந்துவிடும். எனவே எங்களை கைதிகளிடம் நேரடியாக சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும். வக்கீல்கள் இன்டர்காம் மூலம் தான் பேச வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தால் அந்த உத்தரவை சிறை அதிகாரிகள் காட்ட வேண்டும்" என்றனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களிடம் சிறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.