திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் அக்டோபர் 25ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிகொண்டிருந்த மூன்று வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. குழந்தையைக் காப்பாற்ற அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஐந்து நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சுஜித் சடலமாக மீட்க்கப்பட்டான். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆழ்துளை கிணறு அமைக்க அரசிடம் அனுமதிபெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஏபா நகர் பகுதியில் தஸ்லீமாதாஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது. தகவல் அறிந்து நகராட்சி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது என தெரியவந்தது. இதனால் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றை ஊழியர்கள் உதவியுடன் பாதுகாப்பாக மூட வைத்தனர்.
இதையடுத்து அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைப்பது தவறுதான். அதே நேரத்தில் அனுமதி வேண்டும் என மனு தந்தால், போர் போடும் செலவை விட இவர்கள் அதிகளவில் லஞ்சமாகவே வாங்கிவிடுகிறார்கள். அதை நினைத்தால் தான் கவலையாக உள்ளது. அதனால் தான் அனுமதி பெறாமல் போர் போடுகிறார்கள் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.