திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியானது கடந்த 2014ம் ஆண்டு தொடங்கியது. ரூ. 80 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கிய இந்த பணியானது, அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து கருமண்டபம், மத்திய பேருந்து நிலையம், எடமலைப்பட்டி புதூர், ரயில்வே ஜங்ஷன் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கான பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
ஆனால் சென்னை செல்வதற்கான, மன்னார்புரம்புரம் பகுதி பாலம் மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்து வந்தது. ராணுவத்திற்கு சொந்தமான 67 சென்ட் நிலம் பெறுவதில் சிக்கல் நீடித்ததால் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி திருச்சிக்கு வந்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “அரிஸ்டோ மேம்பால பணிகள் குறித்து அமைச்சர்கள், துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ராணுவ இடம் பெறுவதில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு வாரத்திற்குள் கையெழுத்தாகி பணிகள் தொடங்கும்” என்று கூறினார்.
அதன் படி மன்னார்புரம் செல்லும் பகுதியில் பாலம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக ராணுவ இடத்தில் உள்ள காம்பவுண்ட் உடைக்கப்பட்டு, கையகப்படுத்தப்பட உள்ள இடத்தில் இருக்கும் மரங்களை அப்புறப்படுத்தப்படும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் இன்னும் 3 மாத காலத்திற்குள் பாலப்பணிகள் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று தெரிகிறது.