திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர், மலேசியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வரும் விமானங்களில் தொடர்ந்து தங்கம் கடத்தல் நடைபெற்று வந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருவது வாடிக்கையாகி இருந்து வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை துபாயிலிருந்து திருச்சிக்கு அதிகாலை வரவுள்ள ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் பேரில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திருச்சி வந்து விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனால் விமானத்தில் வந்த எந்த பயணிகளிடமும் கடத்தி வந்ததாக கூறப்படும் தங்கம் சிக்கவில்லை. இதனால் குழப்பமடைந்த நிலையில் இருந்த அதிகாரிகளு மேலும் ஒரு ரகசிய தகவல் கிடைத்தது, அதன்படி ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் ஒருவர் மூலமாகத்தான் தங்கம் கடத்தல் கும்பலுக்கு 2.5 கிலோ தங்கம் கை மாறப் போவதாகத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள் விமான நிலையத்தில் வெளிப்புற பகுதி, வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய பகுதியிலும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஏர் இந்தியா நிறுவன ஊழியர் கோபிநாத் (50) என்பவர் முக்கிய பிரமுகர்கள் வரும் பகுதியான கார்கோ பகுதி வழியாக வந்தார். அங்கு தங்கம் கடத்தல் கும்பலை சந்தித்தார்.
இதனை அதிகாரிகள் எதர்ச்சையாக கண்காணித்த போது கோபிநாத் தனது கையில் வைத்திருந்த தங்கக் கட்டிகளைத் தங்கக் கடத்தல் கும்பலிடம் கொடுக்கும்போது சுங்கத்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர்.
இதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த தங்க கடத்தலில் தூபாயிலிருந்து வந்த பயணி உள்பட மேலும் மூவருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து 5பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த தங்கத்தை பறிமுதல் செய்து அவர்களை திருச்சி நீதிமன்ற நடுவர் எண் 2இல் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு ரூ1.5 கோடி மதிப்புடைய என தெரிவித்தனர்.