மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம், கொல்கத்தாவில் உள்ள 108வது வார்டில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருபவர் சுஷந்தா கோஷ். இவர், நேற்று இரவு தனது வீட்டு வாசலில் முன்பு நாற்காலியில் அமர்ந்து, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுஷாந்த் கோஷ் மீது இரண்டு முறை சுட்டார். ஆனால், அவரது துப்பாக்கி வேலை செய்யாததால் குண்டு வெளியே வரவில்லை.
இதில் சுதாரித்து கொண்ட சுஷாந்த் கோஷ், உடனடியாக அந்த நபர்களை பிடிக்க முயன்றார். அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர், பின்னால் அமர்ந்திருந்த நபரை மட்டும் விட்டுவிட்டு தப்பிச் சென்றார். உடனடியாக சுஷாந்த் கோஷ், ஓடிச் சென்று, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கவுன்சிலர் சுஷாந்த் கோஷை கொலை செய்வதற்கு பீகாரில் இருந்து ஆட்களை கூலிக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.