மாண்டஸ் புயலால் வீட்டை இழந்த மலைவாழ் மக்கள் புதிய குடியிருப்புகள் கட்டித் தருமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் அணைக் கரையோரப் பகுதியில் உள்ளது சின்னார்பதி கிராமம். மலைவாழ் மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் வேட்டைத் தடுப்புத் தொழிலையும், கூலித்தொழிலையும் செய்து தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து வருகின்றனர். கடந்த 1992 ஆம் ஆண்டில் இப்பகுதி மக்களின் நலனுக்காக தமிழக அரசால் வீடுகள் கட்டித் தரப்பட்டன.
இந்த 30 ஆண்டுகளில் புயல் மற்றும் கனமழையால் இவர்களின் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனால், மழைக்காலங்களில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், மாண்டஸ் புயல் காரணமாக வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் சின்னார்பதி மக்களின் ஆறு வீடுகள் விழுந்து தரைமட்டமாகின. இருப்பினும், அந்தச் சமயம் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இதையறிந்த வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி சின்னார்பதி மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களுடன் உதவித் தொகையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, வீடு இல்லாமல் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் புதிய குடியிருப்புகளைக் கட்டித் தர வேண்டும் எனத் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாயவன், லட்சுமணன் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் பேசும்போது, “நாங்க இங்க 40 குடும்பங்கள் இருக்கோம். கூலி வேலை செஞ்சி எங்களையும் எங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துட்டு வாறோம். இந்த பேய் மழையால எங்க வீடுகள் இடிந்து போய்விட்டது. அரசாங்கம் எங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தா நிம்மதியா இருக்கும்” என்றனர். அதுமட்டுமல்லாமல், சின்னார்பதி பகுதியில் ஒற்றை யானை சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அவசரத்திற்கு வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.