ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் சில புதிய நடைமுறைகளை அந்நிறுவனம் கொண்டுவந்துள்ளது. அதன்படி எவ்வளவு டெலிவெரிகளை கொடுத்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்ற நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்விகி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பழைய நடைமுறையான ஊக்கத்தொகை, ஊதியம் ஆகியவற்றை தொடர வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பணிபுரிந்து வரும் ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஸ்விகி ஊழியர்கள் போராட்டத்தின் அடுத்தகட்டமாக பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் இருந்து பெங்களூருவில் உள்ள ஸ்விகி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நோக்கி நடைபயணமாக புறப்பட்டுள்ளனர். ஸ்விகி நிறுவனத்தின் உரிமையாளர் பெங்களூரில் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அங்கு சென்று தங்கள் கோரிக்கையை வைக்க இருப்பதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.