புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் உள்ள ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் தினக்கூலி வேலை செய்யும் ஜெயலெட்சுமி நாகராஜன். பல வருட கனவான வீடு கட்ட பள்ளம் தோண்டும் போது மண்பானை தெரியவே அதனை எடுக்கும் முன்பே உடைத்துவிட்டனர். உடைந்த அந்த பானைக்குள் பளபளப்பாக பல தங்க நாணயங்கள் கிடைத்தது.
தன் நிலத்தில் குழி தோண்டிய போது கிடைத்தாலும், மண்ணுக்கு கீழே உள்ள பொருள் அரசாங்கத்திற்கே சொந்தம் என்பதால் உடனே காவல்துறையினர், வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார் ஜெயலெட்சுமி. தன் நிலத்தில் கிடைத்த 16 தங்க நாணயங்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்த ஜெயலெட்சுமியை அதிகாரிகள் பாராட்டி பொன்னாடை போர்த்தினார்கள்.
தொடர்ந்து தங்க நாணயங்களை ஒரு வங்கியில் வைத்து எடை பார்த்த பிறகு கருவூலத்தில் ஒப்படைத்தனர் அதிகாரிகள் மொத்தம் 62.5 கிராம் தங்கம் இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு யாரோ மண்ணுக்குள் மறைத்து வைத்த தங்கப்புதையல் ஏழை கூலி தொழிலாளி கையில் கிடைத்தாலும் அதிகாரிகளிடம் ஒப்படைத்த ஜெயலெட்சுமி நாகராஜனை பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.