நேற்று முன்தினம் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முடிவடைய இருக்கிறது. முதல்நாள் காவிரி விவகாரத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இறுதி நாளாக நடைபெற இருக்கும் கூட்டத்தொடரின் இன்றைய நாளில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.
வினாக்கள் விடைகள் நேரம் முடிந்த பிறகு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டுவர உள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் விடுபட்டிருந்தது. தற்போது மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டதால் அந்த மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இணைக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.
அதேபோல் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் ஒரு சட்ட மசோதாவைக் கொண்டுவர உள்ளார். 2012 க்கு பிறகு பல்வேறு விதமான கட்டணங்கள் குறிப்பாக ஆம்னி கட்டணங்கள், ஆர்டிஓ அலுவலகத்தில் புதிய வாகனங்கள் பதிவு செய்வதற்கான கட்டணங்கள் போன்ற பல்வேறு கட்டணங்களை உயர்த்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் துணை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதற்கான ஒப்புதல் இன்று நடைபெற இருக்கிறது. மசோதாக்கள் நிறைவேற்றத்திற்குப் பிறகு தேதி குறிப்பிடப்படாமல் சட்டமன்றம் முடிவடைய இருக்கிறது.