Skip to main content

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை சரமாரியாகத் தாக்கிய திருநங்கைகள்! 

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

Transgenders assaulted the govt bus driver and conductor

 

கடந்த இரு நாள்களுக்கு முன்பு சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி இரவு 9.30 மணியளவில், அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் கிளம்பியுள்ளது. அயோத்தியாப்பட்டணம் அருகே பேருந்து சென்றபோது, பயணிகளில் ஒருவர் பயணச்சீட்டு பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பேருந்து நடத்துநர் கமலக்கண்ணன் பயணச்சீட்டு கணக்கை சரிபார்த்தபோது, அதில் பயணம் செய்த திருநங்கை ஒருவர்  பயணச்சீட்டு எடுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

 

இதுகுறித்து அவரிடம் நடத்துநர் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் பேருந்து நிலையத்தை பேருந்து சென்று அடைந்த உடன், பயணச்சீட்டு எடுக்காத திருநங்கையை நடத்துநர், நேரக்காப்பாளர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தியுள்ளார். அங்கு அபராதம் செலுத்தும்படி நடத்துநர் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருநங்கை, அலைப்பேசி மூலம் ஆத்தூரில் உள்ள சக திருநங்கைகளுக்கு தகவல் கொடுத்து நிகழ்விடத்திற்கு வரவழைத்திருக்கிறார். சிறிது நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் அங்கு திரண்டனர். அவர்கள் பேருந்து நடத்துநர் கமலக்கண்ணனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதைத் தடுக்க முயன்ற சக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களையும் திருநங்கைகள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் பேருந்து நிலைய புறக்காவல் நிலைய காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். அவர்கள் திருநங்கைகளை விலக்கி விட்டுள்ளனர்.    

 

இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்,  நடத்துநர்கள் ஆத்தூர் பேருந்து நிலையத்தில், சிறிது நேரம் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த கமலக்கண்ணன், ஓட்டுநர் ரமேஷ் ஆகியோர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்