விழுப்புரம் மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது தொரவி கிராமம். இப்பகுதியில் வசித்து வருபவர் 29 வயதான திருநங்கை மது. இவர் கடந்த 27ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் வி.சாலை பெட்ரோல் பங்க் அருகில் சென்றுகொண்டிருந்த பொழுது ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது.
அந்தக் குழந்தையை வாரி எடுத்த திருநங்கை மது தன் வீட்டிற்குக் கொண்டு வந்து பராமரித்து வந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த கிராம சுகாதார செவிலியர் ராகினியிடம் சென்ற திருநங்கை மது தனக்கு குழந்தை கிடைத்த விபரத்தை கூறி அதற்கு ஒரு சான்றிதழ் தருமாறு கேட்டுள்ளார். இந்த தகவலை செவிலியர் ராகினி வட்டார மருத்துவ அலுவலர் வினோத் என்பவருக்கு தெரியப்படுத்தினார். அவர் மூலம் விக்கிரவாண்டி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள், ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட அரசு அதிகாரிகள் திருநங்கை மதுவை நேரில் சென்று சந்தித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் சாலையோரம் கிடந்த குழந்தையை அரசு காப்பகத்தில் தான் ஒப்படைக்க வேண்டும் எனவே குழந்தையை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அந்தக் குழந்தையை நான் வளர்க்கப் போகிறேன் உங்களிடம் தரமாட்டேன், குழந்தையை பெற்ற தாய் வந்து கேட்டால் மட்டுமே தருவேன் என்று பிடிவாதம் செய்துள்ளார். அதிகாரிகள் அரசு சட்ட விதிமுறைகள் குறித்து திருநங்கை மதுவிற்கு அதிகாரிகள் நீண்ட நேரம் விளக்கமளித்தனர். அதன்பிறகு தயக்கமான மனநிலையில் திருநங்கை மது குழந்தையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். உடனடியாக குழந்தை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.