கடந்த 2 ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் தலைமைச் செயலக காலனியில் உள்ள வீட்டில் முன்னாள் மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வேளச்சேரி போலீசார் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த செப்.23 ஆம் தேதி ஆத்தூர் அருகே முன்னாள் மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் வெங்கடாசலம் வீட்டில் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தேரடி வீதியில் உள்ள வெங்கடாசலதிற்கு சொந்தமான வீட்டிலும் அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் செப்.23 ஆம் தேதி சோதனை நடத்தினர். அதேபோல் அவரது வங்கி லாக்கரில் சோதனை நடத்தப்பட்டிருந்தது. இந்த புகாரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ''சுமார் 35 ஆண்டுகளாக வனத்துறை அதிகாரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றிய வெங்கடாசலம் இதுபோன்ற கோழைத்தனமான முடிவுக்கு வருவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை. வெங்கடாச்சலத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர். எனவே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும்'' என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.