தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி என 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ஒரே ஒரு திருநங்கை மாணவியான ஸ்ரேயா, 600க்கு 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்திருக்கிறார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணவேனி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரேயா, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இது குறித்து பேசிய மாணவி ஸ்ரேயா, “நான் தேர்ச்சியடந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய திருநங்கை சமூகத்திற்கே பெருமை சேர்க்கும் விதமாக இருக்கிறது. எந்த திருநங்கையும் தவறான பாதைக்குச் செல்லாமல் அனைவரும் கல்வியை நோக்கித்தான் செல்ல வேண்டும் என்பது தான் எனது ஆசை. என்னுடைய ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் என்னை மாணவியாக மட்டும் தான் பார்த்தார்கள். யாரும் திருநங்கை என்று கூறி ஒதுக்கவில்லை. தற்போது கல்லூரியில் பி.பி.ஏ படிப்பில் சேரவிருக்கிறேன். முடித்துவிட்டு எம்.பி.ஏ படிக்கவுள்ளேன். எனது குடும்பம் ஏழ்மையான குடும்பம். எனது படிப்பிற்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.