இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் பெண் காவலர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த அளவிற்கு தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் காவல்துறை வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலே பலதியாகங்களை செய்தாக வேண்டிய நிலை உள்ளது. முதலில் குடும்பத்தோடு செலவிட நேரம் இருக்காது. இந்த தியாகங்களின் பட்டியலில் பெண் காவலர்களின் நிலைமை இன்னும் மோசம். காவல்துறை வேலைக்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் பட்டியலில் அடங்காது.
பெண் காவலர்களுக்கு ஒரே ஆறுதல் தங்களின் பெற்றோர், கணவன், குழந்தைகள் வசிக்கும் ஊரில் பணியாற்றுவது என்பது மட்டும் தான். இந்த ஆறுதலை பெறுவதற்கு அவர்கள் பணிக்கு வந்து பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய பரிதாபமாக சூழ்நிலை நிலவுகிறது. வேலை கிடைத்து விட்டாலும் தாங்கள் விரும்பிய ஊருக்கு பணியிட மாறுதல் கிடைக்காமல், பெற்றோரை, கணவரை, குழந்தைகளை பிரிந்தே பெண் காவலர்கள் பல ஆண்டுகள் வெளியூரிலேயே பணி புரிய வேண்டிய நிலைமை உள்ளது.
இந்த நிலைமைக்கு முதன்மை காரணம், காவல்துறையில் பணி இடமாறுதல் பெறுவதற்கு பெண்களுக்கு என்று எந்த சலுகையும் இல்லை என்பதே ஆகும். ரேஷன் கடையில் கூட ஆண், பெண் தனி வரிசை உண்டு. ஆனால், காவலர்கள் பணி இட மாறுதல் பெறுவதில் தனித்தனி பட்டியல் கிடையாது. இதற்காகவே பெண் காவலர்கள் பலரும் திருமணத்துக்கு பிறகு குழந்தைகளை கணவரின் பராமரிப்பில் விட்டுவிட்டு, பணியிட மாறுதல் கிடைக்கும் வரை, ராமர் வனவாசம் சென்றது போல், பணி புரியும் இடத்தில் தவிப்புகளும், அழுகையுமாக காத்திருக்க வேண்டியது உள்ளது.
பெண் காவலர்களுக்கு 8 மணி நேர பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்ட போதிலும், தமிழகத்தில் இதுவரை அது சாத்தியமற்றதாகவே உள்ளது. பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்று சொல்லும் வரிகளில் பெண் காவலர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது போன்ற ஒரு கட்டமைப்பு காவல்துறையில் உள்ளது.
தமிழ்நாட்டில் காவலர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் விருப்ப இடமாறுதல் பெற வேண்டும் என்றால் அதற்கான உத்தரவை டி.ஜி.பி. தான் வழங்க வேண்டும். காலாண்டுக்கு ஒருமுறை வீதம் ஆண்டுக்கு 4 முறை காவலர்களுக்கான பணி இட மாறுதல் உத்தரவை டி.ஜி.பி. வழங்குவார். இப்படி ஒரு நடைமுறை இருந்தாலும், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுவது இல்லை. குறிப்பாக கடந்த ஓராண்டு காலகட்டத்தில் காவலர்களுக்கான பணியிட மாறுதல் உத்தரவை டி.ஜி.பி. இன்னும் வழங்கவில்லை என்ற பெரும் குறை காவலர்கள் மத்தியில் உள்ளது.
குறிப்பாக துணை முதல்வரின் மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வதில் தமிழக காவல்துறை அக்கறை செலுத்துவது கிடையாது. காவலர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் வழங்குவது விருப்ப இடமாறுதல் என்ற பெயரில் கூறப்பட்டாலும் அதற்கும் காவல் துறை நலன் சார்ந்த சில காரணங்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு மாதமும் காவலர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணி ஓய்வு பெறுவார்கள். தலைமை காவலர்கள் நிலையிலோ அல்லது சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலையிலோ ஓய்வு பெறுவார்கள். அவ்வாறு ஓய்வு பெறும் போது, பணி காலியிடம் ஏற்படும்.
தேனி மாவட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் 10 பேர் வீதம் ஓய்வு பெற்றாலும் காலாண்டுக்கு 30 பேர் பணி ஓய்வு பெறுவார்கள். அவ்வாறு ஓய்வு பெறும் போது அந்த காலிப் பணியிடத்தை பூர்த்தி செய்வதற்கு ஆயுதப்படையில் இருந்து லோக்கல் எனப்படும் காவல் நிலையங்களுக்கு காவலர்கள் பணி மாறுதல் செய்யப்படுவார்கள். இதனால் ஆயுதப்படை பிரிவில் பணி காலியிடம் ஏற்படும். இந்த காலியிடத்தை பூர்த்தி செய்வதற்கு பிற மாவட்டங்களில் இருந்து விருப்ப இடமாறுதல் கேட்டவர்களுக்கு காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப மாறுதல் வழங்கப்படும்.
ஆனால், தேனி மாவட்டத்துக்கு கடந்த ஜூன் மாதம் பிற மாவட்டங்களில் இருந்து காவலர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது. பின்னர் ஜூலை மாதம் சென்னை மாநகர காவல் பிரிவில் இருந்து சிலர் இடமாறுதல் பெற்று தேனியில் பணியில் சேர்ந்தனர். அதன்பிறகு கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் ஆகியும் தேனி மாவட்டத்துக்கு காவலர்கள் இடமாறுதல் செய்யப்படவில்லை. இதற்கான பட்டியல் கடந்த ஜூலை மாதமே தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், டி.ஜி.பி. அலுவலகத்தில் அந்த கோப்புகள் தேங்கிக் கிடக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாறுதல் கிடைக்கும் என்று காவலர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர். ஆனால், ஏமாற்றம் தான் கிடைத்தது. அதன்பிறகு செப்டம்பர் மாதம் வந்து விடும்... டிசம்பர் மாதம் வந்து விடும்... ஜனவரி மாதம் வந்து விடும்... பிப்ரவரி மாதம் வந்து விடும் என டி.ஜி.பி.யின் ஒற்றைக் கையெழுத்துக்காக காவலர்கள் காத்திருந்தனர். ஆனால் ஒவ்வொரு மாதங்கள் வந்த போதிலும், உத்தரவு வரவில்லை. அதற்குள் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது. அதன் கூடவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது விருப்ப இடமாறுதல் உத்தரவில் கையெழுத்து போட முடியாது என்பதால் காவலர்கள் இடமாறுதல் கோப்பு மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த மாதம் தேர்தல் முடிவே வந்து விட்டது. தேர்தல் நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனாலும் இன்னும் காவலர்களுக்கான இடமாறுதல் உத்தரவு கையெழுத்தாகவில்லை. தற்போது காவலர்களின் ஒற்றை நம்பிக்கை இந்த மாதம் டி.ஜி.பி.யாக உள்ள டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெற உள்ளதால் ஓய்வுக்கு முன்பு அவர் கையொப்பம் போட்டு விடமாட்டாரா-? என்ற எதிர்பார்ப்பு தான்.
தேனி மாவட்டம் மட்டும் இல்லை. தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டு காலமாக இந்த எதிர்பார்ப்புடன் தான் ஆயிரக்கணக்கான காவலர்கள் உள்ளனர். டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் இந்த இடமாறுதல் உத்தரவை வழங்காமல் போய்விட்டால், அடுத்து வரும் டி.ஜி.பி. பதவி ஏற்றவுடனே கையெழுத்து போடுவார் என்று உறுதியாக சொல்ல முடியாது தான். அவர் பிற பணிகளில் உள்ள பரபரப்பில் ஒரு மாத காலம் கிடப்பில் போட்டுவிட்டால் கூட, ஆகஸ்டு மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. அப்படி தேர்தல் அறிவிப்பு வெளியானால், மீண்டும் பல மாதங்கள் பணி இடமாறுதல் கோப்புகள் கிடப்பில் போடப்படவே வாய்ப்புகள் அதிகம். அந்த மன உளைச்சலில் காவலர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன அந்த அளவுக்கு துணை முதல்வரானஒபிஎஸ்சின் சொந்த மாவட்டத்திலேயே போலீசார் பணி இடம் மாறுதல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவது தான் பெரும் அவலமாக இருக்கிறது,
இந்த நிலைமை இனியும் தொடர்ந்து ஏற்பட்டால் காத்திருக்கும் அத்தனை காவலர்களின் சாபமும் ஓய்வு பெறும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை நோக்கி தான் திரும்பும். இத்தனை ஆண்டுகள் பணியாற்றிய டி.கே.ராஜேந்திரன் மனநிறைவுடன் பணி ஓய்வு பெறப் போகிறாரா? அல்லது விருப்ப மனு கொடுத்துவிட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் காவலர்களின் சாபத்தோடு ஓய்வு பெறப் போகிறாரா? என்பது இந்த மாதம் இறுதியில் தெரிய போகிறது என்பது தான்.