“விருதுநகர் தொழிலாளர் நல உதவி ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஸ்டெனோ டைப்பிஸ்ட் பிரேமாவதி, மகப்பேறு விடுப்பில் சென்ற 25 நாட்களில், அப்பணியிடத்துக்கு கீதாலட்சுமி என்பவருக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு, அவர் பணியேற்றுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலும், தொழிலாளர் நலத்துறையில் பணிபுரிந்த டைப்பிஸ்ட் செல்லதுரைச்சி மகப்பேறு விடுப்பில் இருந்தபோது, அப்பணியிடத்திற்கு மற்றொரு ஊழியருக்குப் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தொழிலாளர் ஆணையரின் இச்செயல், தமிழக அரசின் உத்தரவை மீறிய செயலாகும்.
தொழிலாளர் நலத்துறையில், மகப்பேறு விடுப்பில் சென்ற அனைத்துப் பெண் ஊழியர்களும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கையால், தொழிலாளர் நலத்துறையின் பெண் ஊழியர்கள் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பில் செல்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மகளிர் நலனுக்கு எதிரான இப்போக்கு தொடருமானால், பிற துறைகளிலும் இந்த ஆபத்து ஏற்படும். தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு எதிராகச் செயல்படும் கூடுதல் தொழிலாளர் நல ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என விருதுநகர் மாவட்ட தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் நம்மிடம் குமுறலை வெளிப்படுத்தியதோடு, முதல்வர் வரைக்கும் புகார் அனுப்பியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வியிடம் பேசினோம், “அரசுத்துறையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு கால 9 மாத விடுப்பினை சங்கங்கள் போராடி பெற்றுத் தந்துள்ளன. இந்த 9 மாதங்களும், தாயும் குழந்தையும் பாசப்பிணைப்போடு இருக்க வேண்டும்; தாய்ப்பால் அந்தக் குழந்தைக்கு கிடைக்கவேண்டும் என்ற செயல்முறைக்காகவே, இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையானது, மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாகவே நமக்குக் கிடைக்கிறது.
ஆனால்.. இந்த தொழிலாளர் நலத்துறையில், மகப்பேறு விடுப்பு யாரெல்லாம் எடுக்கிறாங்களோ, அவங்கள எல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னாலயே, தொலைதூர மாவட்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிடறாங்க. கையூட்டு வாங்கிக்கிட்டு, அந்த இடத்த யார் கேட்டாலும், அவங்களுக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் கொடுத்துடறாங்க. எப்படித் தெரியுமா? விருதுநகர் மாவட்டம்னா திருச்சில தூக்கி போட்ருவாக்க. அந்த மூலைல இருந்து இந்த மூலைக்குன்னு மாத்தி மாத்தி போட்றது தொழிலாளர் நலத்துறையில நடந்துக்கிட்டிருக்கு. இதுல கொடுமை என்னன்னா.. மகப்பேறு விடுப்பில் உள்ள பெண் ஊழியர்களுக்கு, அதற்கான ஊதியம் வழங்குவதில்லை. இப்படி நடந்தால், அந்தப் பெண் ஊழியர் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்? குழந்தையை எப்படிப் பராமரிக்க முடியும்? கைக்குழந்தையை வச்சிக்கிட்டு கண்ணீரும் கம்பலையுமா யார்கிட்ட சொல்லுறதுன்னே தெரியாம, மகப்பேறு விடுப்பிலுள்ள பெண் ஊழியர்கள் பரிதவிக்கிறாங்க.
தொழிலாளர் நலத்துறை ஆணையர் ரவிசங்கரை நாங்க போயி பார்த்தோம். பொதுவா மகப்பேறு விடுப்பு எடுக்கும் பெண் ஊழியரோட பணியிடம் அப்படியே நிலுவையா இருக்கிறதுனால, இன்னொரு பெண் ஊழியருக்கு அங்கே டிரான்ஸ்ஃபர் போடறோம்னு சொல்லி தப்பிக்கப் பார்த்தாரு. ஒரு பெண் ஊழியர் மகப்பேறு விடுப்புல போனாங்கன்னா, அவங்களோட பணிகள் அப்படியே கிடப்புல கிடந்திருதுன்னு காரணம் சொன்னாரு. அவரிடம் நாங்க, இது எல்லா அரசுத்துறையிலும் நடக்குறதுதான. பெண் ஊழியர்கள் தொழிலாளர் நலத்துறையில் மட்டுமா வேலை பார்க்கிறாங்க? இது, தமிழ்நாட்டுல அரசுத்துறையில் வேலை பார்க்கும் எல்லா பெண் ஊழியர்கள் சம்பந்தப்பட்டது. ஒரு அரசு ஆணையை மீறி செயல்படறீங்க. இது சட்டத்துக்குப் புறம்பானது. ஏற்றுக்கொள்ளவும் முடியாதுன்னோம்.
நிறைய அரசு அலுவலகங்களில் கழிப்பறை இல்லாம, உணவு சாப்பிடறதுக்கு இடமில்லாம, அவங்கவங்க இடத்துல வச்சி சாப்பிட்டு பெண் ஊழியர்கள் அவஸ்தைப்படறாங்க. இதையெல்லாம், அரசுத்துறை அதிகாரிகள் சரிபண்ண மாட்டாங்க. அரசியல், பணபலத்தைப் பயன்படுத்தி பெரிய போஸ்ட்டுக்கு வந்துடறாங்க. அரசாங்கம் ஒரு ஆர்டர் போடுமாம். அதிகாரிகள் அதை மீறுவார்களாம். கேலிக்கூத்தால்ல இருக்கு?” என்று ஆதங்கப்பட்டார். விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மின்னல்கொடியைத் தொடர்புகொண்டோம்.
“பிரேமாவதிக்கு பேறுகால விடுப்பு ஊதியம் கிடைக்கும்படி செய்துவிட்டோம். மற்றபடி, பெண் ஊழியர்கள் இடமாற்ற நடவடிக்கை என்பதெல்லாம், மேலதிகாரிகள் சம்பந்தப்பட்டது” என்று முடித்துக்கொண்டார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், மகப்பேறு விடுப்பில் உள்ள பெண் ஊழியர் மாறுதலை எதிர்த்து, 23-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளனர்.