பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களின் முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் பொருட்களை வாங்க குவிவது வழக்கமானது. குறிப்பாக சென்னை தி.நகர் போன்ற இடங்களில் பொருட்களை வாங்கவும், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் வெளியூர் செல்லவும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். இதற்காக தமிழக அரசு சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்படும். வரும் அக்.24 தீபாவளி பண்டிகை என்பதாலும் அதற்கு முந்தைய நாட்களான சனி, ஞாயிறு விடுமுறை என்பதாலும் பொருட்கள் வாங்குதல், சொந்த ஊருக்கு செல்லுதல் என பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும்.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. பண்டிகை கால விடுமுறையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு மெட்ரோ நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.