திருச்சி திருவெறும்பூரில் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை காமராஜ் என்ற காவலர் துரத்தி சென்று எட்டி உதைத்ததால் நிலைதடுமாறி அவர்கள் இருவரும் கீழே விழுந்துள்ளனர். தம்பதியினர் கீழே விழுந்த போது, எதிரே வந்த வேன் கர்ப்பிணி பெண் உஷா மீது ஏறியது. இதில் உஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உஷாவின் கணவர் தர்மராஜா படுகாயத்தோடு துவாக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து நிற்காமல் சென்றவர்களை துரத்திச்சென்று போலீஸ் தாக்கியதால்தான் விபத்து நடந்ததாக குற்றம்சாட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 3000 க்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்தநிலையில் கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணமான, காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதனை ஏற்காத பொதுமக்கள் அந்த காவலரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதனை ஏற்க மறுத்து போராட்டம் நீடித்தது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாத காவல்துறையினர், ஒரு கட்டத்தில் மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக திடியடி நடத்தினர்.
தடியடி நடத்தப்பட்ட நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த பல அரசு பேருந்துகள் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டது. இதில் பலர் மண்டை உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட ஓடினர். இது தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.