திருச்சி - ராமேஸ்வரம் செல்லும் ரயில் கீரனூரில் நிற்காமல் செல்வதால் மக்கள் பாதிக்கப்படுவதாக, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ள அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், "சென்னையில் இருந்து புதுக்கோட்டை வழியாக இராமேஸ்வரம் செல்லும் திருச்சி-ராமேஸ்வரம் ரயில், காலை 7.15 மணிக்கும், மாலை 7.30 மணிக்கும் கடந்த வாரம் வரை கீரனூர் பகுதியில் நின்றுசென்றது. ஆனால் அது விரைவு ரயிலாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில்வே அமைச்சகம் அறிவித்த நிலையில், எந்த எந்த வழித்தடத்தில் ரயில் நிற்கும் என்ற பட்டியலையும் வெளியிட்டது. அதன்படி, 4-ஆம் தேதிமுதல், ரயில் நிற்கும் இடங்கள் மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் கீரனூர் வழித்தடம் இல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், சிறு, குறு தொழில் செய்வோர், ஏழை எளிய மக்கள் எனப் பலர் பாதிக்கப்படுவர். எனவே, வழக்கம்போல் கீரனூா் வழித்தடத்தில் ரயில் நிறுத்தப்பட்ட வேண்டும்.
இதுகுறித்த கோரிக்கை மனுவுடன் பாராளுமன்ற உறுப்பினா் திருநாவுக்கரசரிடம் நேரில் சந்தித்துக் கடிதம் கொடுத்துள்ளோம். உடனடியாக மத்திய அரசிடம் பேசி இந்த ரயில் வழித்தட நிறுத்தப் பட்டியலில் கீரனூா் வழித்தடத்தை இடம்பெற செய்யவேண்டும். கீரனூா் ஒரு பேரூராட்சிப் பகுதி என்பதாலும், அதிகளவில் மக்கள் பயன்பாடு இருக்கும் ஊா் என்பதாலும், திருச்சியில் இருந்து இராமேஸ்வரத்திற்கு தினமும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இங்கு நிறுத்தாமல் செல்ல உள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களின் இந்த கோரிக்கையை ரயில்வேதுறை அமைச்சகம் ஏற்காமல்போனால், பொதுமக்கள் ஒன்றிணைந்து, வருகின்ற 4-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று எச்சரிக்கை விடுத்தனா்.