ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் போராட்டத்தை நடத்துவதற்கான சிறந்த இடம் மெரினா கடற்கரை தான். என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், காவிரி உரிமைக்கான போராட்டங்களை மிரட்டி ஒடுக்க ஆட்சியாளர்கள் துடிப்பதா? என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையிலும், எலியட்ஸ் கடற்கரையிலும் நேற்றிரவு போராட்டம் நடத்திய இளைஞர்களும், இளம் பெண்களும் கைது செய்யப் பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை மூட ஆணையிட்டுள்ள அரசு, கடற்கரைகளில் நடைபயிற்சிக்கு வந்தவர்களையும் சோதனை என்ற பெயரில் அவதிப்படுத்தியுள்ளது.
காவிரிப் பிரச்சினையில் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக 36 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட போராட்டங்களின் பயனாக வழங்கப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களில் அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததால் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோபமும், கொந்தளிப்பும் ஏற்பட்டிருக்கிறது. அதை போராட்டங்களின் மூலமாகத் தான் வெளிப்படுத்த முடியும். அதன்படி சென்னைக் கடற்கரைகளில் போராட்டம் நடத்திய இளைஞர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்திருப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாததாகும்.
குப்புறத் தள்ளியக் குதிரை குழியும் பறித்த கதையாக, காவிரி மேலாண்மை அமைக்கும் விஷயத்தில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்த பினாமி ஆட்சியாளர்கள், இப்போது காவிரி உரிமைகளை மீட்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களையும் ஒடுக்க முயல்வது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும். உண்மையில் காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் நலன்களைக் காப்பதற்கான போராட்டங்களை ஆளுங்கட்சியே முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், பினாமி அரசோ ஒருபுறம் பெயரளவுக்கு உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்து விட்டு, மற்ற அமைப்புகள் போராட்டம் நடத்தாமல் தடுக்கும் சதிச் செயலில் ஈடுபட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்தப் படுவதைக் கண்டு ஆட்சியாளர்கள் அஞ்சி நடுங்குவது ஏன்? என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் அனைத்துக்கும் கடற்கரை தான் சாட்சியாக இருந்திருக்கிறது. சீரணி அரங்கம் இருந்தவரை அனைத்து அரசியல் நிகழ்வுகளும் அங்கு தான் நடந்தன. கடந்த ஆண்டு கூட மெரினா ஒன்று கூடல் தான் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமைகளைப் பெற்றுத் தந்தது. அவ்வாறு இருக்கும் போது காவிரி உரிமைக்காக மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்துவது இயற்கை. அத்தகையப் போராட்டங்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. சட்டம் & ஒழுங்கு சிறிதளவும் சீர்குலையப் போவதில்லை.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் போராட்டத்தை நடத்துவதற்கான சிறந்த இடம் மெரினா கடற்கரை தான். ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடி அறவழியில் நமது உணர்வுகளை மெரினா கடற்கரையில் தான் வெளிப்படுத்த முடியும். இத்தனை சாதகமான காரணங்கள் இருக்கும் போதிலும் அங்கு போராட்டம் நடத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிக்க பினாமி அரசு துடிப்பது ஏன்? இராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசியாக செயல்பட்டு மத்திய ஆட்சியாளர்களை குளிர்விக்க தமிழக ஆட்சியாளர்கள் விரும்புவது தான் அனைத்துக்கும் காரணம் ஆகும். பதவி சுகத்தை தொடர்ந்து அனுபவிப்பதற்காகவும், ஊழலில் திளைப்பதற்காகவும் சொந்த மாநிலத்தின் நலனுக்கு எதிராக செயல்படுவது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதாகும். இத்தகைய துரோகத்தை செய்யும் பினாமி அரசை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
காவிரிப் பிரச்சினையில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மக்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை இத்தகைய தடைகளின் மூலம் தடுக்க முடியாது. அனைத்துத் தடைகளையும் முறியடித்து காவிரி உரிமைக்கான போராட்டம் வெற்றி பெறப் போவது உறுதி. அத்தகைய போராட்டங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்காவிட்டாலும் கூட, அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடாமல் இருப்பதன் மூலம் காவிரி பிரச்சினையில் இதுவரை செய்த துரோகங்களுக்கு பரிகாரம் தேட பினாமி அரசு முயல வேண்டும். கடற்கரையில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.