கரோனா தொற்று ஆரம்பக்கட்ட அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது .
கரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக 5 ஆயிரம் ரயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்ற உள்ளதாக ரயில்வே துறை முடிவெடுத்தது. அதைத்தொடர்ந்து போதிய சுகாதாரமில்லாத ரயில் பெட்டிகளை கரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் வீடியோ கான்பரன்ஸ் மூலம், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில் பெட்டிகள் மருத்துவமனைகளாக மாற்றப்படவில்லை என்றும், தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனை இல்லாத கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டால், அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு இந்த பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு முதற்கட்ட அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்றும், அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால், அருகில் உள்ள மருத்துவனைக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கில் பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.