ரயில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ரயில் சாலைக்கு வந்ததால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து காயில் ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்று காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சரக்கு ரயில் ரயில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டது. மேலும் தடுப்புச் சுவரை உடைத்து கொண்டு சரக்கு ரயில் சாலையில் புகுந்துள்ளது. காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய நிலையில் சரக்கு ரயில் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.
சாலையை நோக்கி சரக்கு ரயில் வந்ததால் அங்கு இருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதே சமயம் அங்கு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. அப்போது ரயில் வந்ததையடுத்து, தண்டவாளத்தை கடக்கும் பாதை மூடப்பட்டிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.