ஜல்லிக்கட்டு வீரரை கொடூரமாகக் கொலை செய்து உடலை கல்குவாரி குட்டையில் வீசிச் சென்றதால் பரபரப்பு.
திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள ஆலம்பாடி என்னும் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. தற்போது செயல்படாத நிலையில் இருக்கும் இந்த குவாரியில் உள்ள பெரிய குட்டை ஒன்றும் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக குட்டையில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் அந்த தண்ணீர் குட்டையில் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர், தீயணைப்பு படையினர் விரைந்தனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்கப்பட்டது. உடல் தண்ணீரில் வீசப்பட்டு எத்தனை நாள் ஆனது எனத் தெரியாத நிலையில், அழுகிய நிலையில் காணப்பட்டது. மேலும் கல் ஒன்றும் உடலுடன் கட்டப்பட்டு கைகள், கால்கள் மற்றும் வாய் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. இறந்தவர் அணிந்திருந்த உடையில் ராமு பாய்ஸ் கேஜிஎம் என்று அச்சிடப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் விசாரணை நடத்தினர். அதே வேளையில் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் திருச்சி மாவட்டம் கருங்குளத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் மணி தான் கொலை செய்யப்பட்டு குட்டையில் வீசப்பட்டுள்ளார். 23 வயதான இவர் ஜல்லிக்கட்டு வீரர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட மணி ஜல்லிக்கட்டு போட்டிகளில் பல்வேறு ஊர்களுக்குச் சென்று காளைகளை அடக்கி வந்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியில் நடந்த முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாமா? அல்லது கொலை செய்யப்பட்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.