தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, ஓலைக்குளம் கிராமத்தில் ஆடுகளவு போன சம்பவத்தில், திருடியதாக சொல்லப்பட்ட ஆடுமேய்க்கும் தொழிலாளியான பால்ராஜ்(55) என்பவரை மிரட்டி சிவசங்குவின் காலில் விழுந்து மூன்று முறை வணங்க வைத்த சமூக அவலத்தினை நக்கீரன் இணைய தளம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இந்த சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய நேரத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான ஜெயகுமார் பால்ராஜின் புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கோவில்பட்டி டி.எஸ்.பி.யான கலைக்கதிரவன் பால்ராஜைக் காலில் விழும்படி மிரட்டிய சிவசங்கு, சாட்சிகளான வீடியோ எடுத்த அவரது மகன் சங்கிலிப்பாண்டி, பெரியமாரி, வீரையா, மகேந்திரன், மகாராஜன் உள்ளிட்ட 7 பேர்களையும் கைது செய்தார்.
ஓலைக்குளம் கிராமத்திற்கு டி.எஸ்.பி.யுடன் சென்ற எஸ்.பி.ஜெயக்குமார் கிராமத்தினரிடம் விசாரணை நடத்திவிட்டு பால்ராஜை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க கிராமத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தார். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தன் காலில் வலுக்கட்டாயமாக மிரட்டி விழவைப்பது அநாகரீகமானது. சட்டத்திற்கு புறம்பானது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார் எஸ்.பி. ஜெயக்குமார்.