கரூர் மாநகர் பகுதியில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அருகில் ராணி சீதை ஆச்சி கம்யூனிட்டி ஹாலில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த வளைகாப்பு விழாவுக்காக கரூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக் கணக்கான கர்ப்பிணி தாய்மார்கள் அழைத்து வரப்பட்டனர்.
காலை 10:30 மணிக்கு அழைத்து வரப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்த விழா அரங்கில் காத்திருந்தனர். ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட மண்டபத்தில் கடுமையான சூடு இருந்ததால் கர்ப்பிணி பெண்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். போதிய காற்றோட்டம் இல்லாத குறுகிய அறை கொண்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் அவதிக்கு உள்ளாகி இருந்த நிலையில், 12:55 -க்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சமுதாய விழாவுக்கு வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து மேயர், துணை மேயர் உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் வந்தனர்.
பின் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பெண்களுக்கு 15 நிமிடங்களில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஆட்சியர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல கர்ப்பிணி பெண்கள், ‘எத்தனையோ கான்கிரீட் கூரை கொண்ட மண்டபங்கள் காலியாக உள்ளது. ஆனால், கொளுத்தும் வெயிலில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைக கொண்ட சீட்டில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து இந்த நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர், முன் பகுதியில் இந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார். பின்பகுதியில் அமர்ந்திருந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு என்ன நடந்தது என்று கூட தெரியவில்லை’ என தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.