திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று (30.09.2021) இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்துவருகிறது.
இந்த நிலையில், திண்டுக்கல் அருகே உள்ள செட்டியபட்டியில் வசித்துவரும் திருப்பதி இன்று காலை வீட்டின் முன் இருந்த கொடி கம்பியில் முகம் துவட்டிய துண்டை காயப்போட்டிருக்கிறார். அப்போது மின்சாரம் அவர்மீது தாக்கியதால் அலறியிருக்கிறார். அதைக் கண்டு அவரது மகன்கள் சந்தோஷ் குமார் மற்றும் விஜய கணபதி ஆகியோர் காப்பாற்றச் சென்றபோது அவர்கள் மீதும் மின்சாரம் தாக்கி துடிதுடித்துக் கீழே விழுந்தனர்.
அதைக் கண்டு திருப்பதி வீட்டின் அருகே குடியிருக்கும் முருகன், சூரியா தம்பதினர் காப்பாற்ற முயற்சி செய்தனர். அவர்களும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதைக் கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரையும், காப்பாற்றச் சென்ற முருகன் தம்பதியினரையும் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், திருப்பதியும் அவருடைய இரண்டு மகன்களும் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார்கள். காப்பாற்றச் சென்ற முருகன் தம்பதினர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகிறார்கள். தொடர் மழையில் மின்சாரக் கசிவு ஏற்பட்டது மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்திருப்பது செட்டியபட்டி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.