இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் 216 ஜோடிகளுக்கு இன்று இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. சென்னை, திருவான்மியூர் மருதீஸ்வரர் கோவிலில் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். சென்னையில் மட்டும் 31 இணை ஜோடிகளுக்கு திருமண விழா நடைபெற்றது. இவர்களுக்காக 72 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசை பொருட்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உள்ளபடியே பெருமையாக இருக்கிறது. எனக்கு மனநிறைவையும் தந்து கொண்டிருக்கிறது. நேற்று முழுவதும் கோவை மாவட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணத்தை நடத்தி முடித்துவிட்டு இரவோடு இரவாக வந்து, ஏதோ தூங்குவதைப் போல ஒரு தூக்கத்தை தூங்கி விட்டு காலையில் உடனடியாக இங்கே புறப்பட்டு வந்திருக்கிறேன் என்று சொன்னால், நேற்று ஏற்பட்ட களைப்புகள் எல்லாம் இந்த நிகழ்ச்சியில் நீங்கி போய்விட்டது என்கின்ற நிலையில் தான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
இந்தத் துறையினுடைய அமைச்சர் சேகர்பாபு பற்றி பலமுறை பல இடங்களில், பல நிகழ்ச்சிகளில், பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். அவர் ஒரு செயல்பாபு என்று அவரை நான் பலமுறை குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன். அவரும் அதைத் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் கூட வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள், கோபித்துக் கொள்ளக் கூடாது. ஒரு முதலமைச்சர் தான் அமைச்சர்களை வேலை வாங்குவார்கள். ஆனால் அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சரை வேலை வாங்கக்கூடிய ஒருவராக இருக்கிறார். வேலை வாங்குகிறார் என்றால் ஏதோ தேவையில்லாத வேலை அல்ல, நாட்டிற்கு பயன்படக்கூடிய வேலை, மக்களுக்கு பயன்படக்கூடிய வேலை. அப்படிப்பட்ட சிறப்புக்குரிய துறையை பெற்றுக் கொண்டு அவர் பல்வேறு பணிகளை, பல்வேறு திட்டங்களை, சாதனைகளை, இதுவரையில் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே இந்து சமய அறநிலையத்துறை இப்படிப்பட்ட ஒரு சாதனை எங்காவது நடந்திருக்கிறதா என்று கேட்டால் தைரியமாக, தெம்பாக சொல்லலாம் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் நடந்திருக்கிறது என்று' என்றார்.