Skip to main content

ஏரியில் நண்டு பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நடந்த சோகம்...!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

Tragedy for the boys who went to catch crabs in the lake ...!
                                                            மாதிரி படம்


விழுப்புரம் அருகில் உள்ளது கண்டம்பாக்கம். இந்த ஊரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் 11 வயது முருகன். அவர் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே ஊரின் குளத்து மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் ரஞ்சித் (10). அவரும் அதே அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். 


இவர்கள் இருவரும், ஒரே வகுப்பில் படிக்கும் நண்பர்கள். நேற்று மதியம் இவர்கள் இருவரும் சில நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஏரியில் நண்டு பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர். சமீபத்தில்தான் அந்த ஏரி தூர்வாரப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதனால், ஏரியில் மேடு பள்ளங்கள் இருப்பது தெரியவில்லை. இந்த நிலையில் சிறுவர்கள் இருவரும் ஏரிப் பகுதியில் நண்டுகளைப் பிடித்துவிட்டு அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர். 
 

அப்போது முருகன், ரஞ்சித் இருவரும் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்டு பதறிப்போன மற்ற சிறுவர்கள் கிராமத்திற்கு ஓடிச் சென்று தகவல் தெரிவித்துள்ளனர். கிராம மக்கள் திரண்டு வந்து ஏரியில் மூழ்கிய சிறுவர்கள் இருவரையும் மீட்டனர். ரஞ்சித் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். முருகனை அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் போது, வழியிலேயே முருகனும் இறந்து போய்விட்டார். இந்தத் தகவல் குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே ஊரைச் சேர்ந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் கண்டம்பாக்கம் கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்