வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றும் முடிவை எதிர்த்த டிராபிக் ராமசாமியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதி இருப்பதால், நினைவு இல்லமாக மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டுமென, தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு அனுப்பி இருந்தார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், இதே கோரிக்கையுடன் கடந்த மாதம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு விட்டதால், அதை எதிர்த்து வழக்கு தொடரும்படி அறிவுறுத்தியதாகவும், ஆனால், அந்த முறையும் அவசரச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கான நகலுடன், முறையான மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, டிராபிக் ராமசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.