திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில் இருந்து 10 கி.மீ தொலைவில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் நிர் வீழ்ச்சியில் அதிகளவு தண்ணீர் வருகின்றன. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு வருகின்றனர். அங்குள்ள நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியிலும், கீழேயும் நின்று ஆண்கள்,பெண்கள், இளைஞர், இளைஞிகள், குழந்தைகள் என குளித்து மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 15 தினங்களில் மட்டும் 2 பேர் மேலிருந்து கீழே விழுந்தும், சறுக்கி விளையாடிக்கொண்டுயிருந்தபோது ஒரு இளம் பெண் மீது மோதி கீழே விழுந்ததில் பாறையில் அவர்கள் மண்டை உடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதேபோல் அங்கு வரும் பெண்களை கிண்டல் செய்யவே அப்பகுதிக்கு குடிகார கும்பல் வருகிறது. இதனால் ஜலகாம்பாறை பாதுகாப்பற்ற பகுதி, குளிக்க தடை விதிக்க வேண்டும் என்கிற குரல்கள் எழத்துவங்கின.
இந்நிலையில் அக்டோபர் 23ந்தேதி காலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள், ஜலகாம்பாறை சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்து நடப்பதால் அதுக்குறித்து ஆய்வு செய்ய இங்கு வந்தோம்.
சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தவும் குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவர்கள் குளிப்பதற்கு ஒரு கட்டமைப்பை அமைத்து தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டங்களை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று அதற்கான பணிகளை விரைவில் தொடங்குவோம் என்றார்.