வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மழை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, அரியலூர், ராமநாதபுரம், திருவாரூர், பெரம்பலூர் ஆகிய 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10 மணி வரை மழைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு புறநகர் பகுதிகளில் இரவு பெய்த கனமழையால் பல இடங்களில் அதிகாலை முதல் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் ஈரோடு புறநகர் பகுதிகளான பள்ளத்தூர், மலைப்பாளையம், சாமிகவுண்டன்பாளையம் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். அதே போன்று ஈரோடு மல்லிகை நகர், அன்னை சத்தியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைத்தளத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளநீர் கோயம்புத்தூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புகுந்ததால் நசியனூர் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலை வழியாக வந்த வாகனங்கள் பல கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.