கோவை மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பாக விதி முறை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என வலியுறித்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவை அதிமுக அலுவலகத்தில் இன்று அதிமுக மாநகர் புறநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகை முன்பாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விதிமுறை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற கோரி அதிமுக அலுவலகம் முன்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.
அதிமுக அலுவலகம் முன்பாக மாநகராட்சி அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் எனவும், அதுவரை இப்பகுதியில் இருந்து செல்ல மாட்டேன் என கூறி காத்திருப்பு போராட்டம் நடத்தும் டிராபிக் ராமசாமியுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பிளக்ஸ் பேனரை அகற்றாமல் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என கூறி காவல் துறையினருடன் டிராபிக் ராமசாமி வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
உடனடியாக விதி மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரை அகற்றவில்லை எனில் கோவை காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாகவும் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக டிராபிக் ராமசாமியின் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. கோவை மாநகர பகுதியில் மட்டும் 40 இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன.