தமிழ் நாட்டின் மாநில மரமான பனை மரத்தை பாதுகாக்க பல்வேறு தனியார் அமைப்புகள் பனை விதையை விதைத்து வருகின்றனர். காரணம் பனை மரமும் அதன் மகத்துவமும் நாளடைவில் இந்த மண்ணில் இருந்து அழிந்து விடக்கூடாது என்பதற்காக தான் அந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் பனை மரத்தின் ஓலையின் மகத்துவமும் தமிழ் மக்களிடமிருந்தும் அழிந்து விடக்கூடாது என்பதற்காக குமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலக்குறிச்சியில் 150 ஆண்டுகளுக்கு மேல் பூச்சிக்காடு பத்திரகாளியம்மன் கோவிலில் பனை ஓலையில் கஞ்சி குடித்து அந்த பாரம்பரியத்தை இன்றும் பாதுகாத்து வருகிறார்கள்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசியில் மண்டைக்காடு திருவிழாவையொட்டி 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் கடைசி நாளில் மதியம் வழங்கப்படும் கஞ்சியும் பூசணிக்காய் கூட்டும் பனை ஓலையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என பனை ஓலை பட்டையில் கஞ்சி குடிக்க குவிகிறார்கள். அங்கு பட்டையை கையில் ஏந்தி கஞ்சி வாங்கி குடிக்கும் மக்கள் இதன் ருசியோ வேறு எதிலும் கிடைக்காது இதே கஞ்சியை பாத்திரத்தில் குடித்தால் ருசி இருக்காது அதை பனை ஓலை பட்டையில் குடித்து பாருங்கள் மருத்துவ குணம் கொண்டதால் உங்களுடைய ஆயுசும் கூடும் ருசியும் அதிகம் இருக்கும் என்கின்றனர்.
ஒரு காலத்தில் பனை ஓலை என்பது மிட்டாய் கடைகளிலிருந்து கல்யாண சீர் வரிசை பெட்டிகள் என அலங்கரித்தன. பனை ஓலையில் வைக்கப்படும் உணவு பொருட்கள் பல நாட்கள் கெடாமல் இருக்கும். பூவோடு சேர்ந்த நாறும் மணப்பது போல பனை ஓலை பெட்டியில் வைக்கப்படும் உணவு பொருட்களும் தனி மணத்தையும் மகத்துவத்தையும் உடலுக்கு ஏற்படுத்தும். திருவிழா காலங்களில் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளுக்கு செல்லும் போது கடைகளில் பனை ஓலை பெட்டிகளில் வைத்திருக்கும் திண்பண்டங்களை தான் வாங்கி செல்லக்கூடிய காலங்கள் இன்றைக்கு மலை ஏறி போய்விட்டது.
ஆனால் பனை ஓலையின் மகத்துவத்தை இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்து அதை பயன்படுத்தும் விதமாக பூச்சிக்காடு பத்திரகாளி அம்மன் கோவிலில் காலகாலமாக தொடரும் பனை ஓலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் கஞ்சி குறித்து அந்த கோவில் நிர்வாகிகளிடம் பேசினோம். நாகரிகத்தின் வளர்ச்சியால் அழிந்து போன பனை ஓலையில் மூன்றாவது தலைமுறையாக கோவில் திருவிழாவில் பனை ஓலை பட்டையில் கஞ்சி பரிமாறி வருகிறோம். இதற்காக ஆண்டுதோறும் அலைந்து திரிந்து பனை மரத்தை கண்டு பிடித்து ஓலை வெட்டி வருகிறோம். இதன் மூலம் பாரம்பரியத்தையும் ஒரு குறிப்பிட்ட மக்களிடத்திலையாவது அழியாமல் வளர்க்கிறோம் என்பது பெருமையாக உள்ளது.
இங்கு சாமி கும்பிடுவதற்கு வருகிறவர்களை விட பனை ஓலை பட்டையில் வயிறு நிறைய பசி தீர்க்கிற அளவுக்கு கஞ்சி குடிக்க வருகிறவர்கள் தான் அதிகம். இதில் சிலர் கஞ்சி குடித்து விட்டு பனை ஓலை பட்டைய வீசி எறியாமல் அதை பெட்டி செய்வதற்காக வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மீண்டும் பனை ஓலைகளை பயன் படுத்துவதன் மூலம் பனை மரங்களையும் பாதுகாக்க உதவும் என்றனர்.