தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் கன மழை பொழிந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, மார்த்தாண்டம், அருமனை, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்துள்ளது. அதேபோல் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பொழிந்துள்ளது. நெல்லை, குமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தேசிய பேரிடர் மீட்புப்படையின் சார்பில் ஒவ்வொருவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளது .எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது.
தென்காசியில் செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பனங்குடி, வள்ளியூர், காவல்கிணறு உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. இன்று நான்கு மணி நிலவரப்படி அம்பாசமுத்திரத்தில் 6.8 மில்லி மீட்டர் மழையும், சேரன்மகாதேவியில் 4.2 மில்லி மீட்டர் மழையும், மணிமுத்தாற்றில் 2.4 மில்லி மீட்டர் மழையும், நாங்குநேரியில் 2.4 மில்லி மீட்டர் மழையும், பாளையங்கோட்டையில் 28 மில்லி மீட்டர் மழையும், திருநெல்வேலியில் 15 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.