லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்தநிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்க்கையில், ஒரு சீரியல் கில்லருக்கும் ஒரு காவல்துறை அதிகாரிக்கும் இடையே நடக்கும் மோதல் என ஒரு கதையை விவரிக்கிறார் விஜய். பின்பு அந்த சீரியல் கில்லர் கூட்டத்தின் மேல் கை வைக்கிறார் விஜய். அதன் பிறகு அந்த கூட்டத்தால் விஜய் குடும்பத்திற்கு ஏகப்பட்ட பாதிப்பு வருகிறது. அதனால் அவரை வேறொரு இடத்தில் மறைந்து வாழ அறிவுறுத்துகின்றனர். பின்பு அந்த கூட்டத்தை விஜய் ஒட்டுமொத்தமாகப் பழிவாங்கினாரா இல்லையா என்பதை ஆக்ஷன் கலந்த படமாக உருவாக்கியிருப்பது போல் தெரிகிறது. இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் லியோ திரைப்படத்தின் டிரைலர் காட்சியைக் காண ரோகிணி திரையரங்கில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு விஜய் ரசிகர்கள் அதிகமாக குவிந்தனர். அப்பொழுது திரையரங்கின் நாற்காலிகளை சேதப்படுத்தி உள்ளனர். நாற்காலிகளின் பஞ்சு உறைகள் கிழிக்கப்பட்டு சுமார் 50க்கும் மேற்பட்ட நாற்காலிகள் சேதமடைந்ததாக திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலாளர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல்துறைக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் பேரிகார்டுகள் நொறுக்கப்பட்டது. ரசிகர்களின் காலணிகள் பள்ளி புத்தகங்கள் போன்றவை திரையரங்க வளாகத்திற்கு உள்ளேயே கிடக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.