Skip to main content

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் சுங்க வரி கட்டண உயர்வு!

Published on 26/04/2020 | Edited on 26/04/2020

 


உலக மக்களை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள தேசிய ஊரடங்கு நீட்டிப்பால் ஏறக்குறைய 1 மாதக் காலம் இந்தியாவில் தொழில்கள், தொழிற்சாலைகள் நசிவுற்று சிறு குறு வணிகர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். 
 

இந்திய பொருளாதாரம் இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. ஊரடங்கு தடை முற்றிலும் நீக்கப்பட்டாலும் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு சிரமங்களை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

 

gg

                                                                        பி.விஜயலட்சுமி


வருவாய் இழந்தவர்களின் பொருளாதார நெருக்கடியை தற்காலிக மாக தீர்க்கும் வகையில் அனைத்து வகை கடன்களுக்கும் மாதத் தவணையை 3  மாதங்கள் ஒத்தி வைக்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.


 

கடன் பெற்றவர்கள், 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ. கட்டத் தவறினால், கூடுதல் வட்டியுடன் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்று அனைத்து வங்கிகளும் ஒரே அணுகுமுறையை கடைப்பிடித்தன. இதனால் பொதுமக்களுக்கு சிறிதளவும் நன்மை கிடையாது என்பது தெரிய வந்தது. இத்திட்டத்தால் அனைவரும் அதிருப்தி அடைந்தனர்.
 

ஊரடங்கு நீட்டிப்பால் மறு ஆய்வு செய்த மத்திய அரசு 17.4.2020  அன்று பொருளாதார வீழ்ச்சியால் பாதிப்படைந்தவர்களுக்கு வங்கிகளில் கடன் பெற சில வழிவகைகளை அறிவித்தது. இதனால் மக்களுக்கு  கடன் பெறும் எண்ணம் உருவாகும். மேலும் கடன் சுமை அதிகரிக்கும். 
 

வாழ்வாதாரத்தை சமன் செய்ய மக்கள் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், மேலும்  மக்களை அச்சுறுத்தும் வகையில்  “காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே” என்று கூடுதல் சுமையை ஏற்றும் விதமாக சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. 
 

ஊரடங்கு காரணமாக பெரும்பாலான வாகன போக்குவரத்து இயங்காமல் போனதால் தேசிய சுங்க சாவடிகளில் வரி வசூலிக்கப் படவில்லை. 
 

ஒருபுறம் மக்கள் மீது அதிக அக்கறையோடு செயல்படுவதாகவும், மறுபுறம் பொதுமக்களை அச்சுறுத்துவது போலவும் மத்திய அரசு வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்தும் விதமாக, ஏப்ரல் 20 முதல் மீண்டும் சுங்க வரி வசூல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, தற்போது 26 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

மீதமுள்ளா சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் மாதம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும், மேலும் ஆண்டுத்தோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பரில் மொத்த விலை குறியீட்டு எண் அதிகரிப்பு அடிப்படையில் சுங்கக் கட்டணம் மற்றும் வசூல் குறித்த விதி 2008ன் படி கட்டணம் நிர்ணயிக்கப்படும்” என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

toll plaza



கீழ்க்கண்டவாறு சுங்கக் வரி கட்டணங்கள்  உயர்த்தப்பட்டுள்ளது.

மினி பஸ் : ஒருமுறை செல்ல கடந்த ஆண்டு கட்டணம் ரூ.110. புதிய கட்டணம் ரூ.115.
24 மணி நேர கட்டணம் ரூ.165, தற்போது ரூ.175.
மாத கட்டணம் ரூ.3,720. புதிய கட்டணம் ரூ.3,860ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்கள் கடந்த ஆண்டு ரூ.235. தற்போது ரூ.245.
24 மணி நேர கட்டணம் ரூ.350. புதிய கட்டணம் ரூ.365.
மாத கட்டணம் ரூ.7,795. தற்போது ரூ.8,085  ஆகவும் உயர்த்தப் பட்டுள்ளது.
மல்டி ஆக்ஸில் வாகனங்களுக்கு ரூ.365. புதிய கட்டணம் ரூ.380.
24 மணி நேர கட்டணம் ரூ.550. தற்போது ரூ.570.
மாத கட்டணம் ரூ.12,220. புதிய கட்டணம் ரூ.12,675ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
7 ஆக்ஸில் வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல ரூ445. புதிய கட்டணம் ரூ.465.
24 மணி நேர கட்டணம் ரூ.670. தற்போதைய கட்டணம் ரூ.695.
மாத கட்டணம் ரூ.14,880. புதிய கட்டணம் ரூ.15,430.
 

முழுமையாக இயல்பு வாழ்க்கை திரும்பாத நிலையில், சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி இருப்பது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு நிச்சயம் வழிவகுக்கும். ஊரடங்கு காலம் முடிவுற்று நிலைமை சீராகும்வரை சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.   இவ்வாறு மக்களை துன்புறுத்துவது கண்டனத்துக்குரியது என்று தலைவர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


பி.விஜயலட்சுமி
சமூக ஆர்வலர்
pvssaravan@gmail.com


 

சார்ந்த செய்திகள்

Next Story

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ரத்து!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Cancellation of fee increase at toll booths

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (01.04.2024) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 7 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் இந்த 7 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயரும் எனவும் கூறப்பட்டது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த கட்டண உயர்வு குறித்த அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Fee increase in toll booths
கோப்புப்படம்

தமிழகத்தில் உள்ள 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (01.04.2024) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 7 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த 7 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.