தனது தொழில் சாமர்த்தியத்தின் மூலம் உலகம் முழுவதும் கிளை பரப்பிய 'சரவணபவன்' ராஜகோபால் இன்று உலகத்தில் இல்லை.
ராஜகோபாலுக்கு 2 மனைவிகள் இருந்தபோதிலும் 3-வதாக ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இதற்கு இடையூறாக இருந்த அவரது கணவர் சாந்தகுமாரை, கூட்டாளிகளை ஏவி கொலை செய்தார். " 3-வது திருமணம் செய்தால் இன்னும் தொழிலில் வளர்ச்சியடையலாம் என்று சோதிடர் கூறிய அறிவுரையாலும், ஜீவஜோதி மீதான பொருந்தா காமத்தாலும்" இந்த விபரீதத்தை அறங்கேற்றினார் ராஜகோபால்.
இந்த வழக்கில் 2004-ஆம் ஆண்டில் ராஜகோபால் உள்ளிட்ட 11 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடினார். வேளச்சேரி போலீஸாரும் மேல்முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றமோ 10 ஆண்டு சிறையை ஆயுளாக அதிகரித்தது. உச்சநீதிமன்றத்திற்கும் சென்றார். உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்ததோடு, ஜூலை 7-ந்தேதிக்குள் சரண் அடைய வேண்டும் என கெடு விதித்தது.
ஆனால், கடைசி நாளில் சரண் அடைவதில் விலக்கு கேட்டு உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் முறையிட்டார். ஆனால், நீதிபதிகள் ஏற்கவில்லை. இதையடுத்து, 8-ந்தேதி ஆம்புலன்சில் வந்து சரண் அடைந்தார். அதன்பிறகு சிறைக்கு செல்லாமலேயே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று வடபழனி விஜயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு 2 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், இன்று காலை ராஜகோபாலின் உயிர் பிரிந்தது.
சட்டத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து, சிறைக்கு செல்லாமலேயே தப்பி வந்த சரவணபவன் ராஜகோபால், இப்போது சிறைக்கு செல்லாமல் இறந்துபோனார். (இடையே விசாரணைக்காலத்தில் மட்டும் சில நாட்களில் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்துவிட்டார்.)
வேளச்சேரி போலீஸார் இந்த வழக்கில் மிகச் சிரமம் எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தனர். ஆனால் வழக்கு விசாரணையின்போது வாய்தா வாங்கியே இழுத்தடித்தார். சட்டத்தை வளைத்த ராஜகோபால் போலீஸாருக்கும் சில சலுகைகளை வழங்கி தங்களுக்கு சாதகமான காரியங்களை சாதித்து கொண்டார். குறிப்பாக காவல் நிலையங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஸ்வீட், டீ, சாப்பாடு ஆகியவற்றை ஸ்பான்சர் பண்ணுவது, போலீஸாருக்கு சாப்பாட்டு டோக்கன் வழங்கி அவர்களை இப்போது வரை ஆதரவாளராகவும் வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
சென்னையில் 'சரவண பவன்' கிளை சார்பில் அந்தந்த காவல் நிலையங்களுக்கு மாதம் 200 முதல் 300 சாப்பாட்டு டோக்கன்கள் வழங்கப்படும். அதை காவலர்கள் பகிர்ந்து கொள்வார்கள். இந்த டோக்கனை பயன்படுத்தி எந்த கிளையிலும் சாப்பிடலாம். ஒருமுறை சரவண பவனின் ஒரு கிளையில் சாப்பிட்ட லோக்கல் போலீஸாரிடம் பில் தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதனால், மறுநாள் அந்த ஓட்டலுக்கு செல்லும் சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றிவிட்டனர் போலீஸார். மேலும் ஓட்டல் முன்பு வாகனங்களை நிறுத்த தடை விதித்தனர். இதனால் வியாபாரம் டல்லாக, ஓட்டல் தரப்பு, போலீஸாரிடம் முறையிட்டது.
அப்போது, "லோக்கல் போலீசுக்கு கூட சாப்பாடு போட மாட்டீர்களா? என காவல்துறை தரப்பில் எகிற", "நிறைய பேர் வந்து லோக்கல் காவல் நிலையத்தின் பெயரை சொல்லி சாப்பிட்டு செல்கின்றனர்" என ஆதங்கப்பட்டுள்ளனர். இதன்பிறகே டோக்கன் சிஸ்டம் அமலுக்கு வந்தது.