
இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி நடப்பதாக இருந்த குரூப்-1 தேர்வு, கரோனா ஊரடங்கு காரணமாக மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்ததால், அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 3ஆம் தேதி 856 மையங்களில் குரூப் -1 தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, தேர்வர்களின் ஒருமுறைப் பதிவு (one time registration) ஐடியுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்தது.
இதனால், தேர்வர்களுக்கு உடனடியாக ஆதார் எண்ணை இணைப்பதிலும் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், TNPSC ஒருமுறைப் பதிவுடன் (One Time Registration) ஆதார் எண்ணை இணைக்க முயலும் போது, பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது.
1) இங்கே நிறையத் தேர்வர்களின் ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்படவில்லை அல்லது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தற்போது அவர்களிடம் இல்லை. எனவே, அவர்கள் ஆதார் எண்ணுடன் புதிய மொபைல் எண்ணை இணைக்கச் செல்லும் போது, ஒரு சில தேர்வர்களின் மொபைல் எண் மூன்று நாட்களில் இணைகிறது.
ஆனால், ஒரு சிலருக்கு 'பயோமெட்ரிக் அப்டேஷன் ஃபெயில்' என்னும் பிழை (error) காரணமாக தங்களது எண்களை அப்டேட் செய்ய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். இன்னும், சிலருக்கு இந்தப் பிழை (error) நேரிடாவிடினும், தங்களது எண்ணைப் பதிவு (update) செய்ய 2, 3 நாட்களுக்கு மேல் ஆகுவதாகத் தெரிவிக்கின்றனர்.
2) ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தேர்வர்களின் பலரது மொபைல்களுக்கு (OTP) நம்பர் வருவதே இல்லை என்ற குறைபாடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களாலும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய இயலாத நிலை உள்ளது. இதனால் தேர்வுக்கு வருடக்கணக்கில் உழைத்தும், தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை உணர்வதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
3) பல தொழில்நுட்பப் பிழையினை சந்திப்பதாகத் தேர்வர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
சிலருக்கு, OTR காலாவதி ஆகிவிட்டது. அதனை அவர்கள் புதுப்பிப்பதற்காக கட்டணம் செலுத்தியபோது, Payment Success என்ற நிலையை online Payment செய்யும் போது அடையவில்லை. இதன் காரணமாக, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய இயலாத நிலை உள்ளது.
மேலும், ஓஎம்ஆர் (OMR) விடைத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வருடமாக கரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வு இல்லாத சூழ்நிலையில், ஒரு வருடத்திற்குப் பின் தேர்வு எழுதும் ஆவலில் இருந்தவர்கள், தற்போது தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற மனக்கவலையில் உள்ளனர். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலால் தேர்வு தயாரிப்புப் பணிகளில் கவனத்தோடு ஈடுபட முடியவில்லை.
TNPSC தேர்வாணையம், தேர்வர்களுக்குப் பயன்படும் வகையில் சரியான முறையில் தேர்வுகளை எதிர்கொள்ள சில அறிவுரைகளையும், செயல்முறை பதிவு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது. இவை, மிகுந்த நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தாலும் கூட, இந்த ஒருமுறை மட்டும் விண்ணப்பித்த அனைவரும் தேர்வெழுத TNPSC தேர்வாணையம் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அளவு குறைவாக இருப்பதாலும் தொழில்நுட்பப் பிரச்சனைகள் ஏற்படுவதாலும், இந்தமுறை மட்டும், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் என்ற நிபந்தனையைத் தளர்த்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் தேர்வு எழுதுபவர்கள்.