Skip to main content

வனச்சரகர் பணி உடல் தகுதித் தேர்வில் முறைகேடு!

Published on 01/03/2020 | Edited on 01/03/2020

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வனத்துறையில் காலியாக உள்ள வனச்சரகர் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 2018- ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
 

அதன்படி 2018- ஆம் ஆண்டு அக்டோபர் 9- ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. பின்னர், இதில் வெற்றி பெற்ற 2288 பேருக்கு 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 மற்றும் 12- ஆம் தேதிகளில் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. 2019- ஆம் ஆண்டு ஜூலை 16- ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நேர்முகத்தேர்வு நடைபெற்றன.  

tnpsc forest exam issues examiners shock

இதில் வெற்றி பெற்ற 152 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால், உடல் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டதால் இதில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும் இந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி, உடல் தகுதித் தேர்வில் தோல்வியடைந்த நபர்களைக் கொண்டு 152 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக உடற்தகுதியற்ற 8 பேர் நேர்காணலுக்கு வந்திருந்ததைக் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்து, அவர்கள் உடற்தகுதியற்றவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டால், மீதமுள்ள பணி ஆணை பெற்ற அனைத்து நபர்களையும் மறு உடற்தகுதி தேர்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று வாதிட்டார். 

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நவம்பர் 4- ஆம் தேதி மறு உடற்தகுதி தேர்வினை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடத்த ஆணையிட்டார். அதன்படி நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்வில், தேர்வாணைய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி உடற்தகுதி அளவில் மார்பளவு இல்லாதவர்கள் 4 பேர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர அளவில் 2  செ.மீ முதல் 10 செ.மீ வரை தவறு நடந்துள்ளது, மேற்கூறிய உடற்தகுதி தேர்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 


எனவே முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களைத் தகுதி நீக்கம் செய்து மீதமுள்ள அனைவருக்கும் மறு உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்களை பணியில் அமர்த்துவதற்கு, வரும் மார்ச் 5- ஆம் தேதி வழக்கின் தீர்ப்பாணை வழங்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்