டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் குறிப்பிட்ட சென்டர்களில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகியுள்ளதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எழுந்த புகார் தொடர்பாக பேரவையில் விளக்கமளித்துள்ளார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதன் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய ஓபிஎஸ், "ஒரே தேர்வு மையத்தில் எழுதியவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றதாக சர்ச்சையாகியிருக்கிறது. இது குறித்து உரிய விசாரணை தேவை" என்றார்.
இந்த பிரச்சனை குறித்து பதிலளித்துப் பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "குரூப்-4 தேர்வில் ஒரே தேர்வு மையத்தில் 615 பேர் தேர்ச்சி பெற்றது தொடர்பாக அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார். 2000 பேர் தேர்ச்சி பெற்றனர் எனக் கூறும் பயிற்சி மையம், பல மாவட்டங்களில் பயிற்சி மையங்கள் வைத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது " என்றார்.