ஜனவரி 9- ஆம் தேதி அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு ஜனவரி 11- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இ.ஆ.ப. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கரோனா வைரஸ் பெருந்தொற்றின் அதீத பரவல் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் நோயினை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசினால் தற்போது, மாநிலம் முழுவதும் 09/01/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்து மற்றும் உணவிற்கான வசதி இல்லாத சூழலில் தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டும், இது குறித்து தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையிலும், 09/01/2022 முற்பகல் மற்றும் பிற்பகல் (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான (அறிவிக்கை எண்.16/2021, நாள் 20/10/2021) எழுத்துத் தேர்வு மட்டும் 11/01/2022 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்வர்கள் 09/01/2022 முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறுவதாக இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுக்காக ஏற்கனவே பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டினையே உபயோகித்து, 11/01/2022 முற்பகல் மற்றும் பிற்பகல் அன்று நடைபெறும் தேர்வினை, நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள, அதே தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 08/01/2022 முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருந்த தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை/ திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டப்படி, அதேநாளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.