கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருள்கள் வாங்கச் செல்லும்போதும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 3 அடி தூரம் சமூக விலகல் எனும் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. கரோனா எச்சரிக்கை காரணமாக, வீடுகளுக்குள் புதியவர்கள், மூன்றாம் நபர்கள் நுழைவதும் தவிர்க்கப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கு உத்தரவு, மக்களின் இயல்பு வாழ்க்கையில் மட்டுமின்றி, அன்றாட அரசு நடைமுறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடுகள், கடைகள் உள்ளிட்ட தாழ்வழுத்தப் பிரிவு மின் இணைப்புகளில் மின்வாரிய ஊழியர்கள் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார பயனீட்டு அளவைக் கணக்கெடுப்பது வழக்கத்தில் உள்ளது. மின் பயனீட்டு அளவு கணக்கீட்டின்படி, உரிய கட்டணத்தை மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீடு முடிந்த 20 நாள்களுக்குள் செலுத்தப்பட வேண்டும்.
ஆனால், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள தற்போதைய நிலையில், வீடுகள், கடைகளில் மின்வாரிய கணக்கீட்டுப்பணிகளும் முடங்கி உள்ளன. இதனால், மின் நுகர்வோர்கள் கடைசியாகச் செலுத்திய பயனீட்டுக்கட்டணத்தையே அதாவது முந்தைய மாத மின் பயனீட்டுக் கட்டணத்தையே தற்போதைய மாதத்திற்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகம் கூறுகையில், ''ஊரடங்கு மற்றும் சமூக விலகல் விதிகள் அமலில் உள்ளதால், மின் கட்டணத்தைச் செலுத்த யாரும் மின்வாரிய அலுவலகங்களுக்கு வர வேண்டியதில்லை. மின் கட்டணத்தைச் செல்போன், கணினிகள் மூலமாக டிஜிட்டல் முறையில் இணையத்தளம் வாயிலாகச் செலுத்தலாம்,'' என்றார்.